தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம், கண்காணிப்பின் கீழ் அரசியல்வாதிகள்: ராகுல் காந்தி

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம் என்று ராகுல் காந்தி கூறினார்.

கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ’21ஆம் நூற்றாண்டில் கவனிக்க கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவின் ஜனநாயகம் தற்போது பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். நான் இந்தியாவின் ஒரு எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர். ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்கு தேவையான அடிப்படைகளான நாடாளுமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், நீதித்துறை என அனைத்தும் எங்கள் நாட்டில் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாங்கள் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிறது. அந்த கூட்டமைப்புக்கு இடையே உரையாடல்கள் அவசியமாக இருக்கின்றன. ஆனால், அது தற்போது தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது என்றார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் போராடும் போட்டோவை காட்டிய ராகுல் காந்தி, “நீங்கள் பார்க்கும் இந்த படம், இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அங்கு நின்று சில பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதுபோல பல முறை நடந்திருக்கின்றது. சொல்லப்போனால் இதுவும் ஒரு வன்முறையே. அதேபோல, ஊடகங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நீங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும்.

எனது செல்போனிலும் பெகாஸஸ் இருந்தது. பெரும்பாலான அரசியல்வாதிகளின் செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு உளவுத்துறை அதிகாரி என்னை அழைத்து, “தயவுசெய்து போனில் பேசும்போது கவனமாக இருங்கள். நாங்கள் உங்கள் உரையாடல்களை பதிவு செய்கிறோம்” என்றார். இதுதான் நாங்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அழுத்தம். எந்த வகையிலும் குற்றவியல் வழக்குகளாக ஆகமுடியாத விஷயங்களுக்காக என்மீது சில குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவைகளைத் தான் நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்றார்.

தொடர்ந்து, பாஜக அரசு பற்றி சில நல்ல விஷயங்களை குறிப்பிடும்படி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “உங்களுக்கு சிலவற்றின் அடிப்படைகள் மீதே நம்பிக்கை இல்லாத போது எப்படி பாராட்ட முடியும்? நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குகிறார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விஷயங்கள் எனக்கு எப்படி பெரிதாகத் தெரியும்? அவர் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.