தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோக்களை பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார். ஆனால் இது போலியானது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என அவர் கூறியிருந்தார்.
இதனிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை.
விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.
தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பினர். வேறு மாநிலங்களில் நடந்தவை, பழைய சம்பவங்கள் இதில் பரப்பப்பட்டன. இவை பொய்யான வீடியோக்கள் என்றும் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் இந்தியிலும் வார்னிங் கொடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்களுக்கு எனத் தனிப் பிரிவையும் உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், இணையத்தில் இதுபோன்ற வீடியோக்கள் சில நாட்களாகவே வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே பொய்யான வீடியோக்களை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதாகவும், இதற்காக ரயில் நிலையங்களில் அவர்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் பரவின. வட இந்திய ஊடகங்களும். சில தமிழ் ஊடகங்களும் கூட இதுபோன்ற செய்தியை வெளியிட்டன. இதனால் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது. அதாவது ஹோலி பண்டிகை இப்போது நெருங்கி வருகிறது. வடமாநிலங்களில் ஹோலி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். வரும் மார்ச் 8ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஹோலியை குடும்பத்துடன் கொண்டாடவே சில வடமாநிலத்தவர் ஆர்வமாகக் கிளம்பி வருவது தெரிய வந்துள்ளது. இணையத்தில் பரவும் பொய் தகவலுக்காக இவர் சொந்த ஊர்களுக்குக் கிளம்பவில்லை. ஹோலி பண்டிகை காரணமாகவே கிளம்புகின்றனர்.
