மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக அலுவலர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், தன்னிடம், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ரவி அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு, அரசுப் பணி பெற்றுத் தராமல் மோசடி செய்துவிட்டதாக அளித்த புகாரின் பேரில் தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாகவும், மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகவும் பலரிடமும் ரவி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார், தலைமைச் செயலக அலுவலர் ரவியை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் கைது செய்துள்ளனர் மத்திய குற்றப் பிரிவு போலீசார்.

கைது செய்யப்பட்ட ரவி, அதிமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.