பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்: பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் தான் இருப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் இது தொடர்பாக அவர் மேலும் சில கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

நமது அண்டை நாடான இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக யுத்தம் நடந்தது. இது கடந்த 2009இல் இறுதிக்கட்டத்தை எட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றதாக இலங்கை ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பான பிரபாகரனின் உடல் என்று வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாகப் பிரபாகரன் குறித்துப் பல மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒரு தரப்பினர் பிரபாகரன் உயிரிழந்தது உண்மை என்றும் மற்றொரு தரப்பினர் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என்றும் கூறி வந்தனர். அவ்வப்போது இது தொடர்பான தகவல்கள் பரபரப்பைக் கிளப்பும்.

இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். உயிருடன் இருக்கிறார் அப்போது பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறி அதிர வைத்தார். மேலும், பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றும் பிரபாகரன் இப்போது நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மட்டுமின்றி பிரபாகரன் விரைவில் வெளியே வருவார் என்றும் பிரபாகரன் அனுமதியுடன் தான் இப்போது இதை அறிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். இது இப்போது பேசுபொருளானது. பழ.நெடுமாறன் கருத்துக்குப் பலரும் பல விதமாகக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று மதுரையில் கே.கே.நகர்ப் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் கூறியதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அமைச்சர்களும் எடுக்கும் தீர்மானத்திற்குக் கையெழுத்திடுவதே ஆளுநரின் அதிகாரம். ஆனால், தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, அதற்கு ஒப்புதல் தர மறுப்பது மக்களாட்சி மாண்பைச் சீர்குலைக்கும் செயலாகும். இதற்குச் சர்வாதிகார போக்கே காரணம். மேலும், மத்திய அரசு நீதித்துறையையும் இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கின்றனர். இதுவும் கூட ஜனநாயக மாண்பைச் சீர்குலைத்துவிடும்.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாருமே உடன்படவில்லை என்று சொல்வது தவறானது. எனது கருத்துக்கு உடன்படாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நான் சொன்னது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறிய பிறகு மக்களிடையே ஆதரவு அதிகரித்தே இருக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் அதனை ஊடகத்தினரைச் சந்தித்து வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.