தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்

வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக ஐசிஎம்ஆர் பரிசோதனை நடத்திய நிலையில் தற்போது அதிகமாகப் பரவி வருவது இன்ஃப்ளூயன்ஸா ஏஎச்3என்2 வகை வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆரின் 30 ஆய்வகங்களில் நோயாளிகளின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 15 முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா ஏஎச்3என்2 வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இந்த வகை வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் என்பது 3 முதல் 4 நாட்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க போதுமான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மார்ச் 10ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக சென்னையில் 200 இடங்களிலும், கிராமப்புறங்களில் 800 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறும்.

மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கடந்த காலங்கள் போல டெங்குவால் ஏற்பட்ட பாதிப்புகள் போல் இப்போது இல்லை. அதேபோல் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளும் செயல்பட்டு வருகின்றன. வைரஸ் தாக்குவது இயல்புதான். கொரோனா போன்ற வைரஸ் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலக சுகாதார நிறுவனமே வைரஸ்களால் ஏற்படும் நோய் தொற்று இனி அதிகமாகும் என கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.