மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவோர் தாக்கப்படுகின்றனர். பிபிசி விஷயத்திலும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார். பிபிசி விஷயத்திலும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது:-
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்னை. இதற்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் நாட்டு மக்களிடம் உணர்ச்சி பெருக்கோடு பேசுவதன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல பிரதமர் எனும் ஒற்றை நபராலும் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டுவிடாது. துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு சிறப்பான திட்டமிடலை மேற்கொண்டால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும். அதேபோல நான் இந்தியா குறித்து அவதூறாக பேசிவிட்டதாக பாஜகவினர் கூறுகினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல வெளிநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா முன்னேறவில்லை. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது’ என்று பேசியிருந்தார். அது அவமானகரமாக தெரியவில்லையா? எனது வார்த்தைகளை திரித்து கூறி இவ்வாறு அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். எனது நாட்டை நான் எப்போதும் அவதூறாக பேச மாட்டேன். இது முன்னரும் இப்படி பேசியது கிடையாது.
அதேபோல சீனா விஷயத்தில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. எங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கால்வான் விவகாரத்தில் சீன வீரர்கள் ஊடுருவி தாக்கியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி இதனை மறுக்கின்றார். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.