திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் முக்கிய எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் என அந்த கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட திப்ரா மோதா கட்சி 13 இடங்களை கைப்பற்றியது.
கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக் கட்சி ஆரம்பித்த பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தேப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி, முதன்முறையாக எதிர்கொண்ட தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை, திப்ரா மோதா கட்சி உடைத்தது. தனிநாடு என்பதே திப்ரா மோதாவின் கோரிக்கையாக இருந்தது. அதனால் திப்ரா மோதாவுடன் பாஜக கூட்டணி அமைக்க விரும்பவில்லை. ஆனாலும் தனிநாடு கோரிக்கையை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என பாஜக தூது அனுப்பியது.
இந்தநிலையில் திரிபுராவில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டை பாஜகவினர்கள் எரித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியை தகர்த்து முதன்முறையாக திரிபுராவில் ஆட்சியை பிடித்தது பாஜக. ஆட்சியை கைப்பற்றிய உடனேயே அங்கிருந்த லெனின் சிலையை உடைத்தது. இந்தநிலையில் இரண்டாவதாக ஆட்சியை தக்க வைத்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் வீடுகளை பாஜகவினர் தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:-
திரிபுராவில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கமல்பூர், சன்டிர் பஜார், பிஷால்கர் ஆகிய பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதராவளர்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பாஜகவும், பிரதமர் மோடியும் வாய்கிழிய பேசும் ஜனநாயகம் இதுதானா.? பாஜகவின் இத்தகைய கொடூரமான தாக்குதல்களையும், வன்முறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். திரிபுரா மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் காப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.