தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்த நபர் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதிவிட்டு மாயமான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் தான் அவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலபேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு பணம் இழக்கும் நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த வகையான தற்கொலைகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை 40க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டு வரப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு பயன்பாட்டில் உள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமாகி உள்ளார். அதாது சென்னை கேகே நகரில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர் அந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனாலும் கூட அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன்மூலம் அவர் ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுரேஷ் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. மாறாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்பபோவதாக எழுதி வைத்திருந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்றனர். சுரேஷின் மனைவி கொடுத்த புகாரில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் அவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.