வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் குழு திருப்தி!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திட்டமிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக செய்திகள் பரவின. இது தொடர்பாக இரண்டு வீடியோக்களும் பரவின. இந்த வீடியோக்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான பாஜக இந்த வீடியோக்களை ஆதாரமாக காட்டி பெரும் அமளியை எழுப்பியது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கமளித்தள்ளதாக துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறினார். அதாவது இந்த இரண்டு வீடியோக்களில் ஒரு வீடியோ, திருப்பூரில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்களிடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்புடையதாகும். அதேபோல, இரண்டாவது வீடியோ தமிழ்நாட்டில் நடந்த உள்ளூர் மக்களுக்கிடையேயான மோதல் என்று தமிழ்நாடு காவல்துறை இந்தியில் விளக்கமளித்திருந்தது. எனவே இந்த வீடியோக்களை தவறான கோணத்தில் பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும், மீறி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதேபோல இந்த எச்சரிக்கையை மீறி வதந்தி பரப்பிய உத்தரப் பிரதேசத்தின் பாஜக செய்தி தொடர்பாளர் உமராவ் மீது தமிழ்நாடு காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்ய உத்தரப் பிரதேசத்திற்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர். இவ்வளவு விஷயங்களையும் எடுத்து கூறியும் பீகார் பாஜகவினர் சமாதானம் ஆகாத நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்ததை சுற்றிகாட்டிய பீகார் பாஜக, தமிழ்நாட்டில் பீகார் இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு பீகார் துணை முதலமைச்சரும் உடந்தை என்று குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழுவை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அமைத்தார். இந்த குழு நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்து சேர்ந்தது. சென்னையில் இந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை திருப்திகரமாக இருந்ததாக பீகார் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து நேற்று பீகார் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திருப்திகரமாக இருந்ததாக பீகார் அதிகாரிகள் கூறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இது குறித்து பீகார் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் இங்குள்ள அதிகாரிகள் மட்டுமல்லாது தொழிற்சங்க நிர்வாகிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் சில விஷயங்கள் தெரிய வந்தது. அதாவது, போலி வீடியோக்கள்தான் இந்த வதந்தியை கிளப்பியிருக்கிறது. இந்த வதந்தியை போக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பீகார் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல ஹெல்ப் லைன் எண்களை அறிவித்தார்கள். மேலும், ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பதட்டமான சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் திருப்திகரமாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு, காவல்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.