குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தவறான செய்தி யார் பரப்பினாலும் அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்தது. அதை ஒன்றாக இணைத்த பெருமை ஜெயலலிதாவை சேரும். பல்வேறு துன்பங்களையும், வழக்குகளையும் சந்தித்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். ஆனால், வீட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கருணாநிதி, அவரது குடும்பம். அதிமுகவில் சிறிய தொண்டர் தலைவராக முடியும். தி.மு.க.வில் அப்படி முடியுமா?. அரசப் பரம்பரை போல், குடும்பத்தினர்தான் அங்கு பொறுப்புக்கு வருகிறார்கள். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட கடுமையாக உழைத்தால் என்னைப்போல உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

உங்களை போல கிளைக்கழக செயலாளராக தொடங்கிதான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். இப்போ இருக்கிற முதல்வருக்கு எதுவுமே தெரியாது. திமுகவில் சாதாரண தொண்டன் முதல்வராக ஆக முடியாது. அது அதிமுகவில் மட்டுமே முடியும். திமுகவில் இதெல்லாம் நடக்காது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அதிமுக ஒன்றாக வந்துவிட்டது. 22 மாத திமுக ஆட்சியில் எந்த பயனும் மக்களுக்கு இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் கொடி கட்டி பறக்கிறது. ஆனால், அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை முதல்வர் ஸ்டாலின் வைக்கிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே ஆட்சி திமுக ஆட்சிதான். திமுக தேர்தல் வாக்குறுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கருணாநிதிக்கு பேனா வைப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அறிவாலயத்தில் வையுங்கள். திமுக புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் திமுக அரசு திறந்து கொண்டிருக்கிறது. இதுதான் விடியா திமுக அரசின் சாதனை.

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக செய்தி வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் நாம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும். இந்தியாவில் சிறு தொழிலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. ஆகவே வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான பிரசாரத்தில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வெளி மாநில தொழிலாளர்களை இங்குள்ள தொழில் அதிபர்கள் அழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து வாரிசு அரசியல் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மேடையில் இருந்த எல்.இ.டிவியில் ஸ்டாலின் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என பேசியது குறித்த காட்சிகளை ஒளிபரப்பி காட்டினார். தொடர்ந்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்காக உழைத்தவர்கள்தான் வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இதை நாங்கள் சொல்லவில்லை.
ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் சொன்ன கருத்தைத்தான் நாங்களும் சொல்கிறோம். குடும்ப வாரிசு அரசியல் வேண்டாம். நீங்கள் சொன்ன கருத்தை அமல்படுத்துங்கள்’ என்றார். மேலும், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பது என்றால் ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தான் பொருந்தும்” என்றும் எடப்பாடி விமர்சித்தார்.