மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!

சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
டெல்லியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனால், பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய சலுகைகள் முன்கூட்டியே கசியவிட்டு அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு கைமாறாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணையும் மேற்கொண்டு இருந்தது. பிறகு டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமை செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. சிபிஐயின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என சாடிய ஆம் ஆத்மி கடும் கண்டனமும் தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மணிஷ் சிசோடியாவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர். இதையடுத்து காவலில் எடுத்து 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. 4 நாள் காவல் முடிந்ததும் மேலும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். மணிஷ் சிசோடியாவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரவில்லை. இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் மணிஷ் சிசோடியா அடைக்கப்பட்டார்.