பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நிர்மல் குமாரைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகியிருக்கிறார்.
திலீப் கண்ணன் தன் ராஜினாமா குறித்து பதிவிட்டுள்ள பதிவில், “இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னைப்போல் இன்னும் எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100 சதவீதம் உழைத்திருக்கிறேன். இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம், இந்த விவகாரம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டின் கடைநிலை பகுதிகள் வரை வேர்விட்டு பாஜக வளர வேண்டும் என்று அண்ணாமலை பேசி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பாஜகவின் ஆணி வேரையே அண்ணாமலை வெட்டி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் கதையை முடிக்க திமுக, விசிக, மதிமுக, சிபிஐ, காங்கிரஸ், ஏன் நாம் தமிழர் கட்சி கூட தேவையில்லை. அண்ணாமலையே போதும்’ என்று கிண்டல் செய்துள்ளார்.