சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கேரள பகுதிகள் மற்றும் குமரி பகுதிகளில் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட சில சமுதாய பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற சட்டம். அவ்வாறாக மார்பை மறைக்கும் வகையில் சீலை அணியும் பெண்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் வெடித்தது. பல பகுதிகளிலும் மக்கள் தோள்சீலை அணியும் போராட்டத்தை மேற்கொண்டனர். இடைவிடாத போராட்டத்தின் பலனாக இந்த முறை நீக்கப்பட்டது.
தோள் சீலை அணிவதற்காக பெண்கள் போராடி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் நாகர்கோவிலில் தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம். கல்வி, வேலைவாய்ப்பு, நாகரிகத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை தொட்டுவிட்டது. இப்படியான உயரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்போ, 100 ஆண்டுகளுக்கு முன்போ இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போக முடியாது. நாடக கொட்டகைகளுக்குள் நுழைய தடை இருந்தது. ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் உண்பதற்கு தனி இடம் இருந்தது. இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே இந்த நிகழ்ச்சி.
80 வயதை கடந்த பெரியவர்களை கேட்டால் தான் இந்த தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம், இப்போது எப்படி உயர்ந்துள்ளோம் என்பது தெரியும். தமிழ்ச் சமுதாயமானது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஆற்றங்கரை நாகரிகத்தில் தலைசிறந்த நாகரிமான வைகைகரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டுதான் கீழடி. உலகம் நாகரிகமடைவதற்கு முன்னதாகவே, ஆடை அணிந்து வாழ்ந்ததோடு அணிகலன்களும் அணிந்து வாழ்ந்த இனம் தான் தமிழினம். அதனை தான் கீழடி காட்டுகிறது. ஆனால் இடைக்காலத்தில் நடந்த பண்பாட்டு படையெடுப்பால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சாஸ்திர சம்பிரதாயங்கள் பெயரால், புராணங்கள் பெயரால் மனிதரை மனிதர் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்கு பெண் அடிமையென்றாக்கிவிட்டார்கள். சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதமாக்கினார்கள். படிக்க கூடாது என்றார்கள். பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டார்கள். இதற்கு எதிராக அருள்பிரகாச வள்ளலாரும், அய்யா வைகுண்டர், அயோத்திதாசர், பெரியார் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை தலைநிமிர செய்தது. பக்தி வேறு பாகுபாடு வேறு என்பதை உணர்த்தினார்கள்.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட இங்கு தீண்டாமை அதிகமாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் குடை எடுத்து செல்லக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, பசு வளர்க்க கூடாது, வீட்டிற்கு ஓடு போட கூடாது, மொரட்டு துணிதான் அணிய வேண்டும் என்று இருந்தது. பெண்கள் அனுபவித்த துன்பங்கள் மற்ற பகுதியில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போட கூடாது என்பது போன்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. அதனை மீறியவர்கள் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் முலைக்கு வரி போட்டார்கள். அப்படி வரிக் கட்டாத காரணத்தால் தனது மார்பை அறுத்து எறிந்தாள் ஒரு பெண். 1882ம் ஆண்டு இதற்கு எதிராக போராட்டம் தொடங்கியது. சீர்திருத்த கிறிஸ்தவ இயக்கம் போராட்டத்திற்கு துணையாக இருந்தார்கள். தோள்சீலை போராட்டத்திற்கு அய்யா வைகுண்டர் துணையாக இருந்தார். அதன் விளைவாக தான் தோள்சீலை அணியலாம் என்ற உரிமை கிடைத்தது. இந்த வெற்றிக்கு காரணமாக அய்யா வைகுண்டர், கர்னல் மன்றோ உள்ளிட்டோர் நன்றிக்குரியவர்கள்.
இன்றைய திராவிட மாடல் ஆட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாம் எல்லோரும் முன்னேற்றம் அடைவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் எதிர்க்கிறார்கள். படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ரூ.1,000 கொடுப்பதால் சிலர் பொறாமைப்பட்டு எதிர்க்கிறார்கள். சமூகநீதி தான் திராவிட இயக்கத்தின் முதலும் இறுதியுமான குறிக்கோள். சமூக அழுக்குகளை சட்டம், மனமாற்றத்தால் மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.