இந்தியாவில் எம்பியாக இருப்பது கடினமான காரியம், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பது கட்டுகதை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவர் ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்கட்சிகள் உளவு பார்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அதேபோல் சீனா இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர்களை ஆக்கிரமித்துள்ளது, ஆனால் பிரதமரும் ஒன்றிய அரசும் அதை நாட்டு மக்களிடம் மறைக்கின்றனர். வலிமையான தலைவராக தன்னை பிரகடனபடுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி, சீனா என்ற பெயரையே பயன்படுத்துவதற்கு அச்சப்படுகிறார். அதன்மூலம் இந்தியாவை மேலும் ஆக்கிரமித்துக் கொள்ள அவர் சீனாவிற்கு அழைப்பு விடுக்கிறார். வலதுசாரிகளால் இந்திய மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இங்கிலாந்தில் இத்தகைய கருத்துகளை ராகுல் காந்தி பேசியது குறித்து, வெளிநாட்டில் இந்தியாவை ராகுல் காந்தி இழிவுபடுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார். ஆனால் அத்தகைய எண்ணம் தனக்கு கிடையாது எனவும், ஒரு போதும் தனது நாட்டை இழிவுபடுத்த மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்தார். அதேபோல் வெளிநாடுகளில் பிரதமர் மோடிதான் இந்தியாவை இழிவுபடுத்தினார் என அவர் குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மீண்டும் ஒன்றிய அரசை தாக்கினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறுகையில், இந்தியாவில் எம்பியாக இருப்பது மிகவும் கடினமானது என்று கூறினார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தின் கிராண்ட் கமிட்டி அறையில் பிரபுக்கள், டேம்ஸ், எம்.பி.க்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய 90 விருந்தினர்களைக் கொண்ட அறையில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முதன்முதலில் அரசியலில் சேர்ந்தபோது, இந்தியாவைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் எனக்கு ஒரு குறிப்பிட்ட பார்வை இருந்தது. அந்த நாட்களில், எந்த இந்தியனும் தான் சொல்ல விரும்புவதைச் சொல்ல முடியும் என்று நான் நம்பினேன். இப்போது அப்படியில்லை. முற்றிலும் திறந்த மற்றும் சுதந்திரமாக இருந்த உரையாடல்கள், இப்போது அடக்கப்பட்டு, தடுமாறி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிறுவனங்களுக்குள் இந்திய அரசின் தன்னிச்சையாக செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் இந்த நிறுவனங்களை வற்புறுத்துகிறார்கள். அதன் காரணமாகவே நான் இந்திய ஒற்றுமை பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டேன். பாரத் ஜோடோ யாத்ராவின் மையக் கருத்து “இந்தியா மீண்டும் பேசத் தொடங்க வேண்டும், உரையாடலும் விவாதமும் வேண்டும், அனைத்து இந்தியர்களிடமும் ஒற்றுமை இருக்க வேண்டும்” என்பது தான். காங்கிரஸ் கட்சி என்பது ஒரு சித்தாந்தம். பாஜகவை விட பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். பாஜகவை யாராலும் வெல்ல முடியாது என்பது ஊடகங்களில் கூறப்படும் ஒரு கதை. ஊடகங்களில் வரும் கதைகளை நான் கேட்பதில்லை. களத்தில் இருக்கும் மக்கள் சொல்வதையே நான் கேட்கிறேன். உலகில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உள்ளது. இப்போது நிலவும் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதனிடையே ராகுல் காந்தியின் கருத்துகள் தனிப்பட்ட கருத்துகள் என்றும் அவரது கருத்துகள் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் பிரிட்டன் எம்பி விரேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.