ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்ததாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்து இருக்கிறார். சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஜீ தமிழ் டிவியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இயக்குநர் கரு.பழனியப்பனும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார்.
ஹவுஸ் புல் படத்தில் நடிகராக அறிமுகமாகி, பார்த்திபன் கனவு படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் கரு பழனியப்பன். சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். நட்பே துணை, டி பிளாக் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். சினிமாவை கடந்து அரசியல் விமர்சகராக தொடர்ந்து ஊடகங்களில் முற்போக்கு கருத்துக்களை பதிவு செய்து வந்தவர் கரு.பழனியப்பன்.
இந்த நிலையில்தான் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழ் நீயா நானா போன்ற தமிழா தமிழா என்ற பெயரில் விவாத நிகழ்ச்சியை கரு.பழனியப்பனை வைத்து நடத்த தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்குமுறை, மூட நம்பிக்களுக்கு எதிராகவும் பல முற்போக்கு தலைப்புகளில் விவாதங்களை நடத்தி சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இதனால் தமிழா தமிழா நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்டது. இதில் விவாதிக்கப்படும் விசயங்களும் வெளியில் பேசுபொருளாகின.
அதேபோல் ரக்கட் பாய்ஸ் விவாதத்தில் ஆண்களுக்கு எதிராக பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கரு.பழனியப்பனை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதுகுறித்து பேசிய கரு பழனியப்பன், “சமூக வலைதளங்களில் எனக்கு இதேபோல் பாராட்டுக்கள் வந்தபோது நான் அதை நினைத்து மகிழ மாட்டேன். அவர்கள் பாராட்டுவார்கள். மீண்டும் திட்டுவார்கள். மீண்டும் பாராட்டுவார்கள். அவர்கள் பாராட்டும் இடத்திலேயோ திட்டும் இடத்திலேயோ இருக்கிறோம் என்றால் நாம் ஒரு வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அவர்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று கரு பழனியப்பன் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி அன்பு!! முத்தங்கள்!!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது..!
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி ஜீ தமிழ், ஜீ 5 தமிழ், சிஜு பிரபாகரன், பூங்குன்றன் கணேசன். உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி! முத்தங்கள்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம்!!” என்று குறிப்பிட்டு உள்ளார்.