இந்தியாவில் வரிச்சுமை கணிசமாக குறைந்துள்ளது: பிரதமர் மோடி

உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

பிரதமர் மோடி, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வருகிறார். இன்று 10-வது அமர்வில் ‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் கூறியதாவது:-

இந்தியா, நிதி ஒழுக்கம்-வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. இன்று உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டில் இந்தியா அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றது. இந்தியாவின் வங்கி அமைப்பில் உள்ள பலத்தின் பலன்கள் அதிகபட்ச மக்களை சென்றடைய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும். பத்தாண்டுகளுக்கு முன் நெருக்கடியில் இருந்த வங்கித்துறை தற்போது லாபகரமாக உள்ளது. நிதி உள்ளடக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களை முறையான நிதி அமைப்பின் பகுதியாக ஆக்கியுள்ளன.

நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் நாடு அதிக பட்ச நன்மைகளை பெறும். வெவ்வேறு புவியியல் பகுதிகள் மற்றும் பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் தனியார் துறைக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். ஜி.எஸ்.டி., வருமான வரி குறைப்பு மற்றும் கார்ப்பரேட் வரி காரணமாக இந்தியாவில் வரிச்சுமை கடந்த காலத்தைவிட கணிசமாக குறைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு மொத்த வரி வருவாய் சுமார் ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24-ம் ஆண்டில் 200 சதவீதம் அதிகரித்து ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2013-14 முதல் 2020-21 வரை தனிநபர் வரி கணக்குகளின் எண்ணிக்கை 3.5 கோடியில் இருந்து 6.5 கோடியாக அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவது ஒரு கடமையாகும். இது தேசத்தை கட்டியெழுப்புவதில் நேரடியாக தொடர்புடையது. வரி அடிப்படை அதிகரிப்பு என்பது மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு சான்றாகும். அவர்கள் செலுத்தும் வரி பொது நன்மைக்காக செலவிடப்படுகிறது என்று நம்புகிறார்கள். வரி விகிதங்களை குறைத்ததால் வரி வசூல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூ பே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது. இது உலகில் நமது அடையாளமாக உள்ளது. டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், இந்தியா யுபிஐ வழியாக ரூ.75 ஆயிரம் கோடியை பண பரிவர்த்தனை செய்துள்ளது. சமையல் எண்ணையில் தன்னிறைவு அடைய வேண்டும். உயர்கல்வித் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். இதனால் இந்தியா அன்னிய செலாவணியை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.