ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தில் நடத்தை விதிகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மீறியதாக பெரிய புகார் பட்டியல் அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கினார். கடந்த மாதம் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கடந்த 2 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தென்னரசு தோல்வியடைந்தாலும் டெபாசிட்டை தக்க வைத்தார். இந்நிலையில் தான் இந்த வெற்றி என்பது திமுகவின் 2 ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமை பேசி வருகின்றனர். மாறாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இது திமுகவின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியில்லை. அவர்கள் கொடுத்த பணம், பரிசு பொருட்களுக்கு கிடைத்த வெற்றி தான் என கூறினர். இந்த விஷயத்தில் இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதிதாக அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவினர் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளனர். திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்தனர். பிரசாரத்தில் விலங்குகளை பயன்படுத்தியதோடு பள்ளி வளாகத்தில் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் இறுதிநாளில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தேர்தல் விதிமீறல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டசப்படி ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தேர்தல் விதிமீறியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் மீதும் ஆக்சனில் இறங்க வேண்டும்” என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.