நாங்கள் போய் ஆள் பிடிப்பது இல்லை.. அவர்களாகவே வருகிறார்கள்: ஜெயக்குமார்!

பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன என்றும் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், நாங்கள் போய் ஆள் பிடிப்பது இல்லை என்றும் அதிமுக வளர்ச்சியை பார்த்து அவர்களாக வருகிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தேர்தல் பணிகள் என தற்போதே கட்சிகள் இலைமறைகாயாக செய்ய தொடங்கியுள்ளன. இதனால், தேர்தல் களமும் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி இடையேயான மோதல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்து வருவது பார்க்கப்படுகிறது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஐடி விங் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அண்ணாமலையை விமர்சித்து விட்டு அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அமர் பிரசாத் ரெட்டி , கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக இப்படி செய்து இருக்கக் கூடாது என்று சாடியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுவதாக கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் இந்த பேட்டி தொடர்பாக கூறியதாவது:-

கல் வீசினால் உடைவதற்கு அ.தி.மு.க. என்பது கண்ணாடி அல்ல. அ.தி.மு.க. என்பது ஒரு சமுத்திரம், பெருங்கடல். அதில் கல் வீசினால் கல்தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் இருந்து கொண்டுதான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இன்று எழுச்சியுடன் உள்ளது. அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளர்வதால் பா.ஜ.க.வினர் விருப்பப்பட்டு தாமாக முன் வந்து இணைகிறார்கள். நாங்கள் யாரையும் இழுக்கவில்லை. தாமாக முன்வந்து இணைவதை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்க வேண்டும். அந்த பக்குவம் அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும். இதேபோல் எல்லா கட்சியில் இருந்தும் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். எழுச்சி, வலிமை, பலத்துடன் அ.தி.மு.க. அசுர வேகத்தில் வளருவதால்தான் எல்லோரும் வந்து சேருகிறார்கள். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. பெருந்தன்மையோடு இருக்க வேண்டும்.

நான் ஜெயலலிதா ஆட்சியின்போது முதல்வராக ஆசைப்பட்டதால் என்னை பதவியைவிட்டு நீக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். அப்படி நீக்கி இருந்தால் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்திருப்பாரா? என்னை ஜெயிக்க வைத்து அமைச்சராகவும் ஆக்கினார். எனது நண்பராக இருந்த வைத்திலிங்கம் தரந்தாழ்ந்து பேசுகிறார். அவர் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார். அவர் வஞ்சத்தில் இருந்து மீண்டு இங்கு வந்தால் நன்றாக இருக்கும். ஜெயலலிதா போல ஒரு தலைவர் இனி யாரும் பிறக்கப்போவது கிடையாது. ஆற்றல், நிர்வாகத்திறமை, அரவணைத்து செல்லும் பண்பு, அன்பானவர்களுக்கு மென்மை கரம், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இரும்பு கரம் கொண்டவர் அவர்.

ஒரு கட்சியில் இருப்பவர்களிடையே உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகளை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். தலைவரே அந்த உணர்ச்சிகளை தூண்டக்கூடாது. கூட்டணி தர்மம் என்ற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அதை உணர்ந்து அந்த வகையில் நடவடிக்கை எடுத்தால் நல்லது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் சொல்லி விட்டனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரத்தில் கட்சியில் இருந்து விலகிய சிலர் அவர்களின் ஆதங்கத்தை சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.