நடிகை நக்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் திருட்டு!

நடிகை நக்மாவிடம் மர்ம நபர் ஒருவர் போனில் பேசி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 1 லட்சம் பணத்தை அபேஸ் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நக்மா. இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவார். இவர் இயக்குநர் ஷங்கரின் காதலன், பாட்ஷா உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார். அது போல் நடிகர் சரத்குமாருடன் ஐ லவ் இந்தியா, அஜித்தின் சிட்டிசன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்குடன் இவர் மேட்டுக்குடி படத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 48 வயதாகிறது. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் இவர் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் முதலில் அரசியலுக்கு வரும் போது அவர் பாஜகவில் இணைவார் என்றும் ஹைதராபாத் தொகுதியில் 2004 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நக்மாதான் வேட்பாளர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீரட் எம்பி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 42,911 வாக்குகளை பெற்று 4ஆவது இடத்தை அடைந்தார். அவருடைய டெபாசிட்டையும் இழந்தார். நீண்ட காலமாக காங்கிரஸில் இருக்கும் நக்மா அண்மையில் மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அத்தகைய வாய்ப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. புதிதாக வந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததால் அதிருப்தி அடைந்த நக்மா இதை வெளிப்படுத்தினார். இதனால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னமும் காங்கிரஸில்தான் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நக்மாவிடம் இருந்து வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் மோசடி கும்பல் பணம் திருடி உள்ளது. நடிகை நக்மாவின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவருக்கு யாரோ போன் செய்துள்ளனர். அவர் தன்னை வங்கி அலுவலர் என அறிமுகப்படுத்தி வங்கியின் கேஒய்சி புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே நக்மாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 1 லட்சம் காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா, மும்பை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து நக்மா கூறுகையில் எனக்கு நிறைய மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் கொடுக்கப்பட்ட லிங்கில் கேட்கப்பட்ட எந்த விவரங்களையும் நான் கொடுக்கவில்லை. ஆனாலும் செல்போனில் பேசிய நபர் கேஒய்சி புதுப்பித்து தருவதாக கூறி இன்டர்நட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார். நல்ல வேலை பெருசா போகலை என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் நடிகை நக்மாவின் போனுக்கு 20 க்கும் மேற்பட்ட ஓடிபிக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அந்த ஓடிபிக்களை நக்மா பகிராமல் இருந்ததால் பெரும் தொகை தப்பியது.

மும்பையில் கடந்த சில தினங்களாக இது போன்ற மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. இதுவரை 80 பேரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வரும் கும்பல் அபேஸ் செய்கிரது. அந்த 80 பேரில் நடிகை நக்மாவும் ஒருவர். இந்த நூதன மோசடி பலரையும் வியப்பில் ஆழ்ந்துள்ளது.