விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ். பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க அவர் முயன்றுவருகிறார். இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த ஊழலில் தெலங்கான முதல்வரின் மகள் கவிதாவிற்கும் பங்கு உள்ளதாக கூறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி எதிர்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மகளிர் அமைப்புகளுடன் இணைந்து மார்ச் 10ம் தேதி (இன்று) ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக கவிதா அறிவித்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் வருகிற 16ம் தேதி ஆஜராக கவிதா அவகாசம் கோரியுள்ளார். இந்த சூழலில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கவிதா கூறியதாவது:-
எங்கே தேர்தல் இருந்தாலும் மோடிக்கு முன்பாக அமலாக்கத்துறை சென்றடைவதை உறுதிசெய்வது விசாரணை அமைப்புகளின் இயல்பு. தெலங்கானா சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை அனுப்பி வருகிறது. தெலங்கானாவின் சுமார் 15 முதல் 16 அமைச்சர்கள் வெவ்வேறு வழக்குகளில் குறிவைக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை பொதுமக்களிடம் சென்று தெரிவிக்குமாறு மோடிஜியை கேட்டுக்கொள்கிறேன். மக்களின் இதயங்களை வென்று பின்னர் தேர்தலில் வெற்றி பெறுங்கள்.
பாஜக, ஒன்பது மாநிலங்களில் “பின்கதவு” முறையைப் பயன்படுத்தி ஆட்சி அமைத்தது. ஆனால் தெலங்கானாவில் அதைச் செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை, அவர்கள் எங்களை மிரட்ட முயன்றனர், ஆனால் நாங்கள் பயப்படும் மக்கள் இல்லை என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம். தெலுங்கானாவில் தலைவர் கேசிஆர் ஆட்சி அமைப்பது உறுதி. பாஜகவின் தோல்விகளை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
மார்ச் 11 ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து, யாருடன் விசாரணை செய்ய விரும்புகிறார்களோ அவர் முன்னிலையில் விசாரிக்குமாறு அமலாக்கத்துறையை கேட்டுக் கொண்டேன், ஆனால் அது மறுக்கப்பட்டது. நான் இன்று கூட அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்று எனது தர்ணாவை ரத்து செய்திருக்கலாம், ஆனால் அவர்களின் தந்திரங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று நான் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பேன். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஏன் கேள்வி கேட்க முடியாது.?. பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டுமானால், அதை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.