அதானி குற்றவாளி என்றால் உதவிய மோடி யார்?: ஆ.ராசா!

ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானியின் ஃபிராடுகள் பற்றி விவரமாக கூறியுள்ளதாக பேசிய ஆ.ராசா, அதானியின் வளர்ச்சிக்கு உடந்தையாக இருந்த பாஜகவும் குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் நகர திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக துணைச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்த்தில் ஆ.ராசா பேசியதாவது:-

இந்தியாவில் இந்து என்றால் பிராமணர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை பகடை காயாக மாற்றுகிறார்கள். இதனை வைத்து இந்து தேசம் என்கிறார்கள். கலைஞர் பேனா நினைவு சின்னம் கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த பேனா தான் கை ரிக்‌ஷாவை ஒழித்தது. அந்த பேனா தான் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க கையெழுத்திட்ட பேனா, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்த பேனா என்று ஏராளமானவற்றை எழுதலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கு என்ன எழுதுவார்கள். ஜெயலலிதா உயிரிழந்ததால், சிறை தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அதன் காரணமாக தான் சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் அதிமுகவினர் சசிகலா தான் தவறு செய்தார், ஜெயலலிதா தவறு செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அந்த தீர்ப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் எதிரியான ஜெயலலிதா செய்தது அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளையர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பேனா நினைவு சின்னம் அமைத்தால், இது சங்கத் தமிழ் பேனா என்று ஏராளமான வாக்கியங்களை எழுதுவோம். ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் தைரியம் இருந்தால், தீர்ப்பில் கூறிய வாக்கியங்களை எழுதுங்கள். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, கொள்ளைக்காரி என்று கூறிய பின்னரும், ஜெயலலிதா பெரும் பொருட்செலவில் நினைவிடம் கட்டியுள்ளார்கள். எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மத்திய அரசை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஒரு ஆள் இந்தியாவில் இல்லை.

பாஜக ஆட்சியில் அதானி உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்களையும் அதானி வாங்கினார். இந்த நிலையில் தான் அதானியின் வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்று ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ஸ்டாக் மானிபுலேசன் ( stock Manipulation ) செய்துள்ளார் அதானி. இன்று ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால், உலக பணக்காரர் பட்டியலில் 36வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மக்கள் எஸ்பிஐ, எல்ஐசி-யில் போட்ட பணத்தை கடனாக பெற்று அதானி ஃபிராடு செய்துள்ளார். அந்த ஃபிராடுக்கு யார் காரணம்? இன்று அதானி ஃபிராடு என்று சொல்லப்பட்டால், உடந்தையாக இருந்த பிரதமரும் குற்றவாளி தானே. அதனை சொல்வதற்கு திமுகவுக்கு மட்டுமே தைரியம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.