நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் வித்யா பாலனும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில் வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், “என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த படத்தின் இயக்குனரை விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது நான் சந்தித்தேன். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவர் ஓட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார். ஓட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது எண்ணம் புரிந்தது. எனவே ஓட்டல் அறைக்கு சென்று அறைக்கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று எதிர்பார்த்து சிறிதுநேரம் காத்து இருந்தார். நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார்” என்று கூறியுள்ளார்.