வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என்று பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனருமான லல்லு பிரசாத் யாதவ் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது பீகாரை சேர்ந்த ஏராளமானோர் ரெயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர். இதற்காக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் லஞ்சமாக நிலங்களை பெற்றதாக புகார்கள் எழுந்தது. இதில் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவியிடமும், மறுநாள் லல்லு பிரசாத்திடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று முன்தினம் லல்லு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், லல்லுவின் மகன் ஹேமா, ராகினி, சாண்டா உள்ளிட்டோரின் வீடுகள், ராஷ்டீரிய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ.அபு டோசனா வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், முறைகேடாக சம்பாதித்த ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
2007-ம் ஆண்டு ஒரு வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மீண்டும் வதந்திகளை பரப்புகிறது. ரூ. 600 கோடி வரை புதிய கதையை கொண்டு வருவதற்கு முன்பு முந்தைய கணக்கை முதலில் தீர்க்க வேண்டும். சோதனைகளுக்கு பிறகு கையெழுத்திட்ட பிடிப்பு பட்டியலை பகிரங்கப்படுத்தட்டும். அப்படி அதை வெளியிட்டால் பா.ஜனதா அவமானத்தை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.