மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி

மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275ல் பெங்களூரு- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை மண்டியா மாவட்டம், மத்தூரில் இருந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மைசூரு- குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாருக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார். சித்தரோட சுவாமி உப்பள்ளி ரெயில் நிலையத்தில் 1,507 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒசப்பேட்டை, உப்பள்ளி-டினைகாட் இடையேயான பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இது ரூ.530 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நல்ல தொடர்பு வசதி ஏற்படும். ஒசப்பேட்டே ரெயில் நிலையம் ஹம்பி பாரம்பரிய சின்னத்தை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து உப்பள்ளி சீர்மிகு நகர திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்ட பணிகளின் மதிப்பு ரூ.520 கோடி ஆகும். மேலும் பிரதமர், ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். இது ரூ.250 கோடியில் நிறுவப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மண்டியா மற்றும் உப்பள்ளி, தார்வாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்களின் அன்பிற்கு இரட்டை எஞ்சின் அரசு மாநில வளர்ச்சியை திருப்பி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக மக்கள் எக்ஸ்பிரஸ் சாலை குறித்து பேசுகின்றனர். எக்ஸ்பிரஸ் சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்தால் இளைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் எல்லோருக்குமான வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. கர்நாடகாவில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது மாநிலம் தழுவிய அளவில் தொடர்பை வலுப்படுத்துகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் வேலைவாய்ப்பு, முதலீடுகள், புதிய தொழில்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கின்றன. நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்றன. புதிய வாய்ப்புகள் உண்டாக்கி தருகின்றன. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்கள் மிகவும் முக்கியமானவை. இவை இரண்டுக்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு. ஒன்று தொழில்நுட்பத்தில் தலைசிறந்தது என்றால் மற்றொன்று பாரம்பரியத்தில் பெருமை வாய்ந்தது. இவற்றை இணைப்பது மிக மிக முக்கியமானது. எங்கெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் இரண்டு பெயர்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். அவர்கள் கிருஷ்ண வாடியார், எம்.விஸ்வேஷ்வர ஐயர் ஆகியோர். இந்த இருவருமே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த எக்ஸ்பிரஸ்வே மூலம் பயண நேரம் குறைவதுடன், இதை ஒட்டியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியும் அடையும்.

மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது. மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு-மைசூரூ நெடுஞ்சாலை அமைப்பதில் மோடி தீவிரமாக இருந்தேன். மோடி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன். மக்களின் நம்பிக்கையே எனது கேடையம். கர்நாடகாவை வளர்ச்சியடைய வைப்பதில் நான் தீவிரமாக உள்ளேன். 2014ஆம் ஆண்டிற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி ஏழை மக்களுக்காக ஒரு கல்லை கூட புரட்டி போடவில்லை. அவர்கள் ஏழைகளுக்கான பணத்தை கொள்ளை அடித்தார்கள். கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நீர்வளத்துறை திட்டங்கள் அனைத்தும் மிக வேகமாக முடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.