மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் மத்திய பிரதேச மாநிலம் அமர்கந்தக் பகுதியில் அமைந்து உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் IGNTU என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் ஏராளமான கேரளாவை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின், “இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரள மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை கண்டிக்கிறேன். மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு பணியாளர்களே தாக்கி இருக்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நசீல், அபிஷேக், அத்னான், ஆதில் ரஷிப் ஆகிய 4 கேரள மாணவர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு பணியாளர்களால் தாக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு பணியாளர்கள் விளக்கமளித்து இருக்கின்றனர். பல்கலைக்கழக பாதுகாவலர்கள் இதனை பார்த்தவுடன் அவர்கள் மீது சரிமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 4 கேரள மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். IGNTU பல்கலையில் இயங்கி வரும் கேரள பிரடெர்னிட்டி என்ற மாணவர் அமைப்பு மாணவர்களை தாக்கிய பாதுகாப்பு பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறது. “நாங்கள் சென்ற இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை தெரிவிக்கும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் அங்கு இல்லை.” என தாக்கப்பட்ட மாணவர் கூறி உள்ளார்.