பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாமக 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, பொது நிழல் நிதி நிலை அறிக்கை ஆகியவை பாமக சார்பில் வெளியிரப்பட்டு வருகிறது.
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிலையில் இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர். இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2023-24-ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை வரும் 20ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் 21-ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை (Shadow Budget) பொதுமக்களின் மேலான பார்வைக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்தப் பணியை தமிழக மக்களுக்கு தான் ஆற்றக்கூடிய மகத்தான சமூக, பொருளாதார, அரசியல் கடமையாக பாமக கருதுகிறது.
இந்த மாநில மக்கள் மீதும், சமூக நீதியோடு கூடிய வளர்ச்சியின் மீதும், ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் மீதும் உண்மையான, உணர்வுப்பூர்வ அக்கறைக் கொண்டுள்ள எங்கள் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா சிந்தனைகள், விவேகம், வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த பொது நிழல் நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டை போதை இல்லா மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகள் மூலம் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆராய்தல், வரியில்லா வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது, ஆகியவை குறித்தும் நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.