மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் உயா்த்தப்போவதாகவும், இந்த உயா்வு 5 முதல் 10 சதவீதம் வரை இந்த கட்டண உயா்வு இருக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் அறிவித்துள்ளது. கடுமையான விலைவாசி உயா்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்கக் கட்டண உயா்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வணிகா்கள், வாகன உரிமையாளா்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் . மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.