15 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயில்கிறார்கள்: மத்திய அரசு தகவல்!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சராசரியாக 10% மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதேபோல் 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழி பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு எம்.பி. பாரிவேந்தர் லோக் சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களைக் கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படும். 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழி பயிற்றுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை என் சிஇஆர்டி உருவாக்கி வருகிறது. அதன் அடிப்படையில், கற்பதற்கான பொருட்கள், பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொழி பன்முகத்தன்மையால் கிடைக்கும் படைப்பாற்றலும் மேன்மையை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்திகிறது என்றும் தெரிவித்தார்.