இந்தியா முழுமைக்கும் பிரசாந்த் கிஷோர் என்னை தெரியப்படுத்திவிட்டார்: சீமான்

இந்தியா முழுமைக்கும், இப்படி ஒருவர் இருக்கிறார் என்று என்னை தெரியப்படுத்திவிட்டார் என்று பிரசாந்த் கிஷோர் குறித்து சீமான் கூறியுள்ளார்.

வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ வெளியாக சர்ச்சையைக் கிளப்பியது. பிரசாந்த் கிஷோர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ” என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியது தொடர்பான வீடியோவை பிரசாந்த் கிஷோர் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தல், 153 (பி)(சி), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் (505)(1), மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோருக்கு சீமான் நன்றி தெரிவித்து பேசியுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சீமான் பேசியதாவது:-

வட இந்தியர்கள் அதிகமாக வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்றுதான் நான் பேசினேன். பிரசாந்த் கிஷோரை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பீகாரி. அதனால் பீகாரிகளுக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன். அதனால் என் இனத்துக்கு உண்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான்.

மிரட்டலுக்கு பணிகிற ஆள் நான் கிடையாது. 1.25 கோடிக்கும் அதிகமானோர் இங்கே வந்து குடியேறுவதால் சிறுக சிறுக நாம் வேலைவாய்ப்பை இழப்போம். இன்று கூலியாக இருப்பவர்கள் நாளை முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கைக்கு போகும். நாம் நிலமற்றவர்களாக போவோம். இது வரலாறு எங்கும் நிகழ்ந்திருக்கிறது. அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு வருபவர், எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார், எத்தனை நாட்கள் தங்குவார், எங்கு தங்குவார், என்ன வேலை செய்கிறார் என்பதை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவரை கண்காணிக்க முடியும். ஏனென்றால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நம் குழந்தையை வன்புணர்வு செய்துவிட்டு போகிறார்கள். அதற்கெல்லாம் யாரும் ஐயோ பாவம் என்று சொல்லவில்லை. நேற்று 12 தமிழக மீனவர்களை சிங்களர்கள் கைது செய்துள்ளனர். வயிற்று பசிக்கு மீன் பிடிக்கத்தானே போனார்கள் என்று யாரும் பாவம் பார்க்கவில்லை.

அது ஏன் நான் அடிவாங்கும் போது நன்முறையாக இருக்கிறது. மற்றவர்கள் அடிவாங்கும் போது வன்முறையாக இருக்கிறது. யார் அடித்தது? எந்த தமிழர் அடித்தது?. அவர்கள் தான் தமிழகத்தை அடிக்கிறார்கள். உடனே, வன்முறையை தூண்டிவிட்டார், இரு இனங்களுக்கு இடையே தூண்டிவிட்டார் என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

400 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு வேலை செய்தவர், 4 ரூபாய் கூட வாங்காமல் என்னை இந்தியா முழுமைக்கும், இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியப்படுத்திவிட்டார். இதற்கே பிரசாந்த் கிஷோருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.