பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு ஜாமின்!

ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

லாலு பிரசாத் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. பலரிடம் நிலம் பெற்றுக்கொண்டு ரயில்வேயில் பணி வழங்கியதாக லாலு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என 2021ல் சி.பி.ஐ விசாரணையை முடித்துக்கொண்டது. இதனிடையே தற்போது இந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுத்து, லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி, மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட மொத்த குடும்பத்தையும் விசாரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி, பாட்னா, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் லாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 24 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ரூ. 600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கும் ஜாமின் கிடைக்கப்பெற்றுள்ளது.