50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வையே எழுதவில்லையே ஏன்?: குஷ்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி மொழி என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசுவார். இந்தி திணிக்கப்படுகிறது என்பார். 50 ஆயிரம் மாணவர்கள் மொழித்தேர்வையே எழுதவில்லையே? இதுபற்றி என்ன சொல்ல போகிறார்? என்று குஷ்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்வை எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 707 மாணவர்கள், 4 லட்சத்து 19 ஆயிரத்து 356 மாணவிகள் ஆவார்கள். முதல் நாளில் தமிழ் தேர்வை 49 ஆயிரத்து 559 பேர் எழுத வரவில்லை. சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதுவும் மொழி தேர்வை எழுதாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 4 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. ஆனால் இந்த ஆண்டு அது 6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி மொழி என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசுவார். இந்தி திணிக்கப்படுகிறது என்பார். 50 ஆயிரம் மாணவர்கள் மொழித்தேர்வையே எழுதவில்லையே? இதுபற்றி என்ன சொல்ல போகிறார்? தமிழை வளர்ப்பது இப்படித்தானா? எங்கோ தவறு நடந்து இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த ஆண்டு தேர்வை எழுதும் மாணவர்களுக்காக ஆலோசனை வழங்கி வாழ்த்தும் சொன்னார்.

அகில இந்திய அளவில் பரீட்சை எழுத செல்லும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவர்கள் எவ்வாறு தேர்வை சந்திக்க வேண்டும்? என்று அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவார். அப்போதெல்லாம் ஒரு பிரதமருக்கு இதுதான் வேலையா என்று கிண்டலடித்தார்கள். இன்று அவரது பாணியையே கடைபிடிக்கிறார்கள். அவரது வழியை பின்பற்றுவது சந்தோஷம்தான். மோடி செயல்படுத்தும் எல்லா திட்டங்களுமே சிறப்பானதுதான் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால் வாயளவில் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வெறும் பேச்சுக்களால் தீர்வு வராது. கல்வித்துறைக்குள் எங்கோ குறைபாடு இருக்கிறது. அதை கண்டறிந்து சரி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.