பெண்களிடம் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. அந்தவகையில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகளை மிரட்ட மோடி அரசின் தந்திரங்கள் தான் இத்தகைய நடவடிக்கைகள் என குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்தநிலையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) மகள் கவிதாவிற்கும் தொடர்புள்ளதாக கூறி கடந்த 9ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி எதிர்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மகளிர் அமைப்புகளுடன் இணைந்து மார்ச் 10ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக கவிதா அறிவித்ததை தொடர்ந்து, போராட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடதக்கது.
டெல்லியில் கடந்த 10ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட கவிதா கூறும்போது, ‘‘எங்கே தேர்தல் இருந்தாலும் மோடிக்கு முன்பாக அமலாக்கத்துறை சென்றுவிடுகிறது. தெலங்கானா சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை அனுப்பி வருகிறது. தெலங்கானாவின் சுமார் 15 முதல் 16 அமைச்சர்கள் வெவ்வேறு வழக்குகளில் குறிவைக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை பொதுமக்களிடம் சென்று தெரிவிக்குமாறு மோடிஜியை கேட்டுக்கொள்கிறேன். மக்களின் இதயங்களை வென்று பின்னர் தேர்தலில் வெற்றி பெறுங்கள்.
பாஜக, ஒன்பது மாநிலங்களில் “பின்கதவு” முறையைப் பயன்படுத்தி ஆட்சி அமைத்தது. ஆனால் தெலங்கானாவில் அதைச் செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை, அவர்கள் எங்களை மிரட்ட முயன்றனர், ஆனால் நாங்கள் பயப்படும் மக்கள் இல்லை என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம். தெலுங்கானாவில் தலைவர் கேசிஆர் ஆட்சி அமைப்பது உறுதி. பாஜகவின் தோல்விகளை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். அவர்களின் தந்திரங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஏன் கேள்வி கேட்க முடியாது.?. பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டுமானால், அதை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும்’’ என்று கவிதா கூறியிருந்தார்.
இந்தநிலையில் பெண்களிடம் விசாரணை நடத்தும் முறையை மாற்றக்கோரி கவிதா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதா தனது மனுவில், மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்களை சவால் செய்துள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ள கவிதாவின் மனுவை மார்ச் 24ம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்டது. “ஒரு பெண்ணை அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு அழைக்கலாமா?” இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
மார்ச் 11 அன்று, பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் தலைவரிடம் அமலாக்க இயக்குனரகம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து வருகிற 16ம் தேதி (நாளை) மூன்றாவது முறையாக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், விசாரணைக்கு ஆஜரனார். அவர் நாளை மார்ச் 16ம் தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கவிதா நாளை மீண்டும் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.