அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் பேரணி கைவிடப்பட்டது.
அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சியினரின் பேரணியை காவல்துறையினர் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், பேரணியை தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித்தலைவர்கள் பேரணியை கைவிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்துக்கே திரும்பினர்.
தங்களது அமைதிப் பேரணியை காவல்துறையினர் தொடர அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமலாக்கத் துறையிடம் புகார் மனு கொடுக்கவிருந்தோம். ஆனால், எங்களது பேரணி விஜய் சௌக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையின் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். அதனால், நாங்கள் நாடாளுமன்றத்துக்கே திரும்பி வந்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம் என்று கூறினார்.