எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையொட்டி அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதன் பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமமுக கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
திமுகவுக்கு 60 மாதங்களில் வர வேண்டிய கெட்டப்பெயர் 20 மாதங்களிலேயே வந்துள்ளது. இருப்பினும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் போயிருந்தால், அதிமுகவுக்கு டெபாசிட் காலியாகி இருக்கும். இன்றைக்கு இரட்டை இலை சின்னமும், கட்சி அலுவலகமும் இருப்பதால் தான் அதிமுக இருக்கிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டாலும், அது வலுவிழந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், எவ்வளவு பணபலம், செலவு செய்தும் ஆட்சியை மட்டுமே மத்திய அரசு உதவியுடன் காப்பாற்ற மட்டுமே முடிந்தது. இன்று ஆட்சியை இழந்திருக்கிறார்கள். அதிமுக பலவீனமடைந்த பின்னரே, உணர்ந்துதான் திருந்துவார்கள். அதுவரை 4 ஆண்டுகளில் கிடைத்த பணபலத்தை வைத்து மோதிப் பார்ப்பார்கள். மலையோடு மோதி மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.
திமுக என்னும் தீயசக்தியை ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் கூட்டணியாக ஓரணியில் திரண்டு வீழ்த்த வேண்டும் என்பதே அமமுகவின் தொடக்க நாள் உறுதிமொழி. அமமுகவில் இருந்து சிலர் சொந்த காரணங்களுக்காக விலகி சென்றுள்ளனர். அதிமுக ஒரு வட்டார கட்சி அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. அமமுகவின் தொண்டர்களால் தான் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமமுக தொண்டர்களுக்கு எழுதிய மடல் பற்றிய கேள்விக்கு, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழ்நாடு முழுவதும் பலமாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சி மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. அதற்கு காரணம், திமுகவோடு சமரசம் செய்து கொண்டது தான். திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்கு காரணமே, எடப்பாடி பழனிசாமியின் திமிரும், அகங்காரமும் தான் காரணம். திமுக வழக்குப் பதிவு செய்து கைது செய்வோம் என்று மிரட்டல் தான் கொடுத்துள்ளது. திமுகவால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் ஈரோட்டில் வெற்றிபெற்றதற்கு அதிமுக பலவீனமாக இருந்ததுதான் காரணம். ஓபிஎஸ்-ஐ ஒதுக்கியதோடு, தன்னை பிரகடனப்படுத்தி கொண்டதால் தான் அதிமுக பலவீனமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு, திமுக தனது கூட்டணியின் பலத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தவறால், ஆவணப் போக்கால் திமுக வென்றது. என்னதான் கூட்டணியில் இருந்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தலாம் என்று தெரிவித்தார்.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அமமுக நிர்வாகி விமர்சித்தது பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். நல்ல அரசியல்வாதியாக இருந்திருந்தால், அதனை கடந்து சென்றிருப்பார்கள். பாதுகாப்பு அதிகாரியே அடியாள் போல் கேமராவை பிடித்து அடித்துள்ளார். முன்னாள் முதல்வர் மீது திருட்டு வழக்கு பதிந்துள்ளதாக கூறுகிறார்கள். திருடினால் திருட்டு வழக்கு தான் போடுவார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். எடப்பாடி பழனிசாமி மீது திமுக முதல் எஃப்ஐஆர் பதிவு செய்ய அமமுக நிர்வாகி தான் காரணம் என்று தெரிவித்தார்.