தமிழகத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் திமுகவினரால், சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலையில், திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் திருச்சி ராஜா காலனி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் ஒன்றையும் திறந்து வந்தார். இதே பகுதியில் திமுக எம்பி திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் டென்னிஸ் மைதான திறப்பு விழாவுக்கு திருச்சி சிவா அழைக்கப்படவில்லை என்றும், திறப்பு விழா கல்வெட்டில் சிவா பெயர் இல்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இது தொடர்பாக அமைச்சர் நேருவின் காரை மறித்து விளக்கம் கேட்க முயன்றனர். இது தொடர்பாக திருச்சி சிவா – கே.என்.நேரு ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவாதம் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி சிவா வீட்டுக்கு விரைந்த சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டில் முகப்பில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமாயின. பின்னர் விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதோடு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேரை கைது செய்தனர். அதேபோல் எம்பி சிவாவின் வீடு மீது அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திருச்சியில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசியுள்ளனர். இந்த தாக்குதலை தடுத்த பெண் போலீஸ் சாந்தி காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர் திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.