சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விவசாய நிலங்களை அழித்துவிட்டு எங்களுக்கு சாலை தேவை இல்லை என விவசாயிகள் போராடியபோது, விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் நின்றன. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.33 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏதேனும் விண்ணப்பம் கிடைத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எதிர்ப்பு ஏதேனும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில்ளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை – சேலம் இடையிலான 277.33 கி.மீ நீளமுள்ள 8 வழிச் சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு எந்த ஒரு விண்ணப்பமும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், திமுக அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டே, எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை எதிர்த்த திமுகவே மீண்டும் அதனை கொண்டு வருகிறதா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அப்போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, எட்டு வழிச்சாலை திட்டத்தில் வரம்புகளை மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தான் திமுக எதிர்ப்பு தெரிவித்தது என்றும் சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு திமுக எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். திமுக எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை என அப்போது எ.வ.வேலு பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது மத்திய பாஜக அரசும், அந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.