அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளின் பயணங்கள், தீவிர ரோந்து பணிகள், மீட்புப் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மலை பிரதேசங்களில் நேர விரையத்தை தவிர்க்க சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் பயணம் செல்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால், அங்கு நிலவும் மோசமான வானிலைகளின் காரணமாக விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டரில் நேற்று காலை 9:15 மணியளவில் 2 ராணுவ விமானிகள் சென்று கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் திடீரென அவர்கள் தொடர்பை இழந்தனர். அந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் 2 விமானிகளுடன் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், காலை முதல் பல மணி நேரங்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். இருப்பினும் விமானிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மலைகள் சூழ்ந்த பகுதி திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற 2 ராணுவ விமானிகளின் நிலை குறித்து தெரியாமலேயே இருந்தது. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ விமானிகளும் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்திய ராணுவ விமானிகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.