இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசி விவாதத்தை கிளப்பி உள்ள ராகுல் காந்தி பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மோடி அரசு ஏன் ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி லண்டன் சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அங்கு ராகுல் காந்தி பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என மத்திய பாஜக அரசை அவர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தான் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதல் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவின் மரியாதை, கவுரவத்தை ராகுல்காந்தி சிதைத்துவிட்டார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உறுப்பினர் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல்காந்தி சபையில் மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் என்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கோரமாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் இருசபைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற இருசபைகளும் 4வது நாடாக முடங்கி உள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்திய குடியுரிமையை பறிக்கும் வகையில் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்று மிகப்பெரிய அரசியல் சாசன குற்றத்தைச் ராகுல் காந்தி செய்துள்ளார். இதனால் அவர் நாடாளுமன்றத்தில் நாடகம் ஆடுவது என்பது வேடிக்கையானது. அவருக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் மோடி அரசு ஏன் குடியுரிமையை பறிக்கவில்லை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2015ல் சுப்பிரமணியன் சாமி அளித்த புகாரில் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்ற கேள்வியுடன் விளக்கம் கேட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.