அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்து தெரிவித்தார். கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதேநேரத்தில் ஏராளமானோர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நேற்றைய பாஜக நிர்வாகிகள் கூட்டம் பரபரப்பாகவே நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக மத்திய அளவில் கூட்டணியை வலிமைப்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி பிளவுபடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.