பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகிறது!

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அக நக’ என துவங்கும் அந்த முதல் பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. சமீபத்தில் நடிகை திரிஷாவின் தோற்ற விடியோவுடன் இப்பாகத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ‘அக நக’ என துவங்கும் அந்த முதல் பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.