அதிமுக தலைமையை ஏற்பவர்களுடன் நாங்கள் இணைவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.
அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டம் மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. சென்னை அமைந்தகரை திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தனியாக இருந்தால் மட்டுமே பாஜகவை தமிழ்நாட்டில் நம்மால் வளர்க்க முடியும். பாஜகவை தனியாக வளர்த்து எடுக்கவே நான் பாடுபட்டு வருகிறேன். நான் ஒன்றும் கட்சியின் மேனேஜர் அல்ல. கட்சியின் மாநில தலைவர் என்றுதான் சொன்னேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும். 2024 லோக் சபா தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், கட்சியில் நான் வகிக்கும் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சாதாரண தொண்டனாக செயல்படுவேன். என்னிடம் தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன. எனது வழியில் செயல்பட முடியாதபோது நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன்.” என்றார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுவதாக அண்ணாமலை பொதுவெளியில் பேசட்டும். கட்சியை வளர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள் இடையே பேசியதற்கு பொது வெளியில் கருத்து சொல்ல முடியாது. அதிமுக தலைமையை ஏற்பவர்களுடன் நாங்கள் இணைவோம்” என்றார்.
அதே நேரம் அதிமுக அமைப்பு செயலாளரான ஆதிராஜாராம் அண்ணாமலை அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ரொம்ப சந்தோசம். அவரது பேச்சில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அரசியல் கட்சிகள் சுமூகமாகவும் நல்லிணக்கத்தோடும் இருந்த நிலையை மாற்றி வார் ரூம்.. அந்த கதை, இந்த கதை.. என அவர்களின் சொந்த கட்சிக்காரர்களையே கொச்சைப்படுத்தி மற்ற கட்சிகளிலும் இப்படி செய்யலாம் என்ற நிலைமை இந்த காலக்கட்டத்தில்தான் பாஜகவில் உருவானது. இது மற்ற கட்சிகளிலும் தொற்றிக்கொள்ளக் கூடாது. ஆகவே அவர் எடுக்கும் முடிவு மிகவும் நல்ல முடிவுதான். நாங்கள் பாசமுடன், அன்புடன் வரவேற்கிறோம். விடை கொடுக்கிறோம்.” என்று கூறி இருக்கிறார்.