கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை, தலைமைதான் முடிவெடுக்கும்: அண்ணாமலை

கூட்டணி பற்றி முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்து போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை இவ்வாறாக கூறியதாக தகவல் பரவியது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? என்பது மீண்டும் விவாதப்பொருளானது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் ஒரு தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதில் தரம் மட்டும் மாறியிருக்கு.. ஆளும் கட்சியகாக இருந்தால் இவ்வளவு.. எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்து கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறிவிட்டது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தனி மனிதனாகவும் உடன்பாடு இல்லை. மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாகவும் மாநில தலைவராகவும் அதை போன்ற ஒரு தேர்தலை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தக் கட்சிக்கும் எதிராக நான் இல்லை. எல்லாக் கட்சிகளுமே அவர்களுடைய பயணத்தில் அவர்களுக்கு எது சரி என்று நினைக்கிறார்களோ.. அரசியல் செய்கிறார்கள். அவர்கள் அரசியல் செய்வது தப்பு என்று சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நேர்மையான அரசியலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு காத்திருக்கிறார்கள்.

கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் நான் பேசி வருகிறேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை தேர்தலில் செலவு செய்து விட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சியில் செலவு செய்தேன். நான் யாருக்கும் எதிரி இல்லை அரசியல் என்பது நேர்மையான நாணயமாக பணம் இல்லாத ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழ்நாட்டில் மாற்றம் என்பது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நடக்காது என்ற எண்ண ஓட்டத்திற்கு நான் வந்துவிட்டேன். அதை எனது கட்சிக்குள்ளும் நான் பேச ஆரம்பித்து விட்டேன். வருகின்ற காலத்தில் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக நான் பேசத்தான் போகிறேன். கூட்டணியை பற்றி அதற்கான நேரம் வரும் போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள். நான் யாருக்கும் எதிரி இல்லை. ஏதோ ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வந்து தவறுகளை செய்வதற்கு நான் தயராக இல்லை. அந்த அடிப்படையில் நான் அன்று சில வார்த்தைகளை பேசியிருந்தேன். நேரம் வரும் போது விவரமாக தீர்க்கமாக நான் பேசுகிறேன்.

எங்கள் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் ஓட்டிற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லும் போது அதற்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. நான் அரசியலில் நான் இதற்கு மேலே இருக்க வேண்டும், இப்படி ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுக்க ஆரம்பித்து விட்டேன். நேர்மையான அரசியல் வர வேண்டும் இப்படித்தான் அரசியல் போகனும்.. நானும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டு தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அந்தந்த கட்சி அவர்கள் யுக்தி படி வேலை செய்கிறார்கள். அவர்கள் ஜெயிக்கிறார்கள். எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள். அதை குறை கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. அரசியல் மாற வேண்டும். நேர்மையான அரசியல் இங்கே வர வேண்டும். அதற்கு 2024- தேர்தல் அச்சாரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை.

கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான். எனது நிலைப்பாட்டில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சியடையும். 2 ஆண்டுகள் தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.