ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. 5 ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம், 2022 ஆகஸ்ட் 23ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி தினமலர் நாளிதழ் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் காக்கப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சுதந்திரமான அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை அளித்து ஆறு மாதங்களுக்கு மேல் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுசம்பந்தமாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து, தமிழக அரசின் பதில் என்னவாக இருக்க போகிறது என்பது குறித்த இந்த வழக்கின் விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.