திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.7000 கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது ஏமாற்று வேலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2021 தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதாகும். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் இருந்த நிதி சூழல் காரணமாக உடனே அந்த திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதாவது உப்பு சப்பில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்கள்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற அடிப்படையில் எதுவுமே தமிழ்நாட்டுக்கு ஆகாத பட்ஜெட்டைதான் இன்று பார்க்கிறேன். குறிப்பாக பெண்களுக்கான உரிமைத் தொகை என்பது தேர்தல் காலத்தில் அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் ரேஷன் அட்டை வைத்து உள்ள 2 கோடி பேருக்கு தருவதாக சொன்னார்கள். 2 கோடி பேருக்கு மாதம் ஆயிரம் கோடி கொடுப்பதாக இருந்தால் 2000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் ரூ.24 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், ரூ.7 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதை போல நாங்களும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று மார்த்தட்டுகிற செயலாகதான் இருக்குமே ஒழிய தமிழ்நாட்டு மக்களை, குறிப்பாக குடும்பத் தலைவிகளை ஏமாற்றுகிற செயலாகும்.
ரூ.7 ஆயிரம் கோடி என்றால் 70 ஆயிரம் பேருக்கு கொடுப்பார்கள். தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னீர்கள்? 2 கோடி பேர் என்று சொல்லிதானே ஓட்டு வாங்கினீர்கள். இது சீட்டிங் என்று சொல்லக்கூடிய ஒரு நம்பிக்கை மோசடி. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு ஆட்சியில் அமர்ந்துவிட்டு யானை பசிக்கு சோளப்பொறி என்பதைபோல், இந்த ரூ.1000 கொடுப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஒரு கண் துடைப்புக்காக ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றிபெறுவதற்காக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உப்புக்கு சப்பில்லாத இதை நிறைவேற்றி உள்ளார்கள். உப்பு சப்பு காரம் இல்லாத ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாததைபோல் அறிவித்து உள்ளார்கள்.
அதுவும் வட சென்னைக்கு வெறும் ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். வட சென்னை திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் அன்றே நான் வட சென்னையை வளர்க்க ரூ.16 ஆயிரம் கோடியில் 5 ஆண்டில் அனைத்து துறைகளை சேர்த்து திட்டம் போட்டோம். அந்த திட்டம் ஒவ்வொரு துறையும் நிறைவேற்றி உள்ளது. அதில் புதிதாக இவர்கள் லேபிள் போட்டு ஆயிரம் கோடி அறிவித்துள்ளார்கள். வெளிநாட்டுக்கு சென்ற லட்சம் பேருக்கு வேலை என்கிறார்கள். அப்படி என்ன வேலை கொடுத்தீர்கள். அது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம். எந்த விதத்திலும் தமிழ்நாட்டு பயனளிக்காத தமிழ்நாட்டு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் இது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைபோல் ஏட்டில்தான் இந்த பட்ஜெட் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.