ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட்டு உள்ளார்.
ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் பிப்ரவரி 15-ல் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ராமர்பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் இருந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க அறிவுறுத்தினர். இந்த கடிதம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டனர். முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சுவாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனவே தனது மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் முறையிட்டு உள்ளார். முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்து உள்ளது.