அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என பிரிந்து உள்ளோம் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் தனியார் கல்லூரியில் ஜி20 இளம்தூதுவர் உச்சி மாநாடு 2023 ‘‘உலக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல்’’ என்ற தலைப்பில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமை வகித்து பேசியதாவது:-
தமிழ் கலாசாரம், நாகரிகம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தற்போது உலகளவில் இயற்கை தொடர்பான பிரச்னை, உணவு பஞ்சம், பொருளாதார ரீதியான பாதிப்பு, போர்கள் இருக்கிறது. ஒரு அமைதியான சூழல் இல்லாத நிலை உள்ளது. ஆண், பெண் பாலினம் தொடர்பான பல பிரச்னைகள் உள்ளன. வேளாண்மை துறையில் பாதிப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் வறுமை நிலை உள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். பல நாடுகள் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி பிற நாடுகளை துன்புறுத்தி வருகிறது. ஆனால், நாம் யாரையும் துன்புறுத்துவது இல்லை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் டிஎன்ஏவில் உள்ளது. பிரிட்டிஷ் அரசு சென்ற பிறகு நமது பாலிசிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளோம். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என பிரிந்து உள்ளோம். இதனால் பிரதமர் ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். குடும்பம் என்றால் நம்பிக்கை. அதனால் நீங்கள் அனைவரையும் நம்ப வேண்டும். இது மக்களுக்கான மைய ஆட்சி. இந்த ஜி20 இளைஞர் தூதுவர் மாநாடு மிகவும் முக்கியமானது. இளைஞர்கள் தான் எதிர்காலம். எனவே உங்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை இந்தியாவின் ‘ஜி20’ மாநாட்டிற்கு வழங்க வேண்டும். இளைஞர்கள் நீங்கள் தான் நம் அடுத்த தலைவர்கள் என்பதை உணர்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், கனவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்குள் அமைதியாக இருந்த சக்தி விழித்துக்கொண்டுள்ளது; அதுதான் இதற்கு காரணம். ஜி20 பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘‘இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள்தான். இவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த மாநாடு இருக்கும். இந்த மாநாடு கோவையில் நடப்பது பெருமையான விஷயம். இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. கொரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. தாய்மொழி கல்வியை அளிப்பதுதான் தேசிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கம் ஆகும். இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு கீழ் உள்ளனர். இங்கு அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர்’’ என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற நடிகை கவுதமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த மாநாடு இந்தியாவில் நடப்பது நமக்கு பெருமை. நம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் தேசத்திற்கு முக்கியமானது. ஜி20-யில் இருந்து நம்மால் என்ன எடுத்துக்கொள்ள முடியும் என பார்த்துக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி உலகளவில் எடுத்துக்காட்டாக உள்ளது. இதில், மீண்டும் அரசியல் பேச்சு வரக்கூடாது. அது தான் தேசத்திற்கு நல்லது. தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியது. மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்பேன். மக்களுக்காக செயல்படுபவர்களை வரவேற்க வேண்டும். உலக அளவில் உள்ள விஷயங்கள் சேர்த்துதான் சிலிண்டர் விலை உயர்வு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.