நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 60 பவுன் தங்க-வைர நகைகளை வேலைக்கார பெண் திருடியதாகவும், அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகு ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டிலேயே வசித்து வருகிறார். கடந்த மாதம் 9ம் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு நகைகள் காணாமல் போய் இருந்தது. சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணமால் போனதால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். தனது ஊழியர்கள் 3 பேர் அந்த நகைகளை திருடி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்திருந்தார். லாக்கர் பெட்டிக்கான சாவி வைத்திருந்த இடம் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றும் ஐஸ்வர்யா கூறினார். ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்து போயஸ்கார்டன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக ஐஸ்வர்யா புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளார். இதற்கு இடையில் ஐஸ்வர்யா தனது கணவர் தனுசுடன் மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி வீட்டில் வசித்தபோது, நகை லாக்கர் பெட்டி அங்கும் இருந்தது என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.
எந்த இடத்தில் வைத்து நகைகள் திருட்டு போனது, எப்போது திருடப்பட்டது, என்பது அவருக்கு தெரியாமல் இருந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் நகைப்பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார் ஐஸ்வர்யா, அப்போது தான் நகைகள் இல்லாதது தெரியவந்துள்ளது. லாக்கர் பெட்டிக்கான சாவி மூலம், அதை திறந்து நகைகளை திருடிவிட்டு, பின்னர் சாவி மூலம் லாக்கர் பூட்டப்பட்டதையும் ஐஸ்வர்யா கண்டுபிடித்திருக்கிறார். இது சம்பந்தமாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரஜினிகாந்த் வீட்டில் நடந்த இந்த திருட்டு தொடர்பான வழக்கு கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இருந்தது. ஆனால் நேற்று எப்படியோ மீடியாக்களில் கசிந்துவிட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையின் தகவல்களையும் வெளியில் கூறினர். 3
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும் போது, “3 வருடமாக நடந்த விஷயம், தற்போது இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஒருவர் சிக்கி உள்ளார். அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதி 40 பவுன் நகைகளை மீட்கும் பணி நடக்கிறது என்று தெரிவித்தார். முழு விவரங்களும் வெளியிடப்படும்” என்றார்.