எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் பார்லிமென்ட் இரு அவைகளும் முடங்கின.
இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லி., இரு அவைகளும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 7வது நாளான இன்றும் (மார்ச் 21) அவை துவங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லி., இரு அவைகளும் இன்றும் முடங்கின. நாளை தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறையால், இரு அவைகளும் நாளை மறுநாள் (ஜன.,23) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன
பார்லி., முதல் தளத்தில், அதானி விவகாரத்திற்கு பார்லி., தனிக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்த வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பிக்கள் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‛ராகுல் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டார். நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத வரையில் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்புவோம். இது பிரச்னையில் இருந்து திசைத்திருப்பும் செயல். நமது தூதரகம் தாக்கப்பட்டுள்ளது குறித்து அவர்கள் (பா.ஜ., அரசு) எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. வங்கி மோசடியில் ஈடுபட்ட மெஹூல் சோக்ஷிக்கு பாதுகாப்பு கொடுத்த இவர்கள் தேசபக்தி பற்றி பேசி வருகின்றனர்’ எனக் கூறினார்.