பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் உயர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி பஞ்சாப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பில் விதிமீறல் ஏற்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அதன் அறிக்கை கடந்த 6 மாதங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு அப்போது பஞ்சாப் முதன்மை செயலாளராக இருந்த அனிருத் திவாரி, காவல் தலைவர் சட்டோபாத்யாய் மற்றும் பிற உயரதிகாரிகள் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்திருந்தது. இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டதும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதன்படி, பஞ்சாப் டி.ஜி.பி. சட்டோபாத்யாய், பஞ்சாப் ஏ.டி.ஜி.பி. மற்றும் பாட்டியாலா ஐ.ஜி.பி. மற்றும் பெரோஸ்பூர் டி.ஐ.ஜி. உள்பட பஞ்சாப்பின் 12-க்கும் மேற்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவு படி விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம் மற்றும் பணி இறக்கம் போன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள அந்த குழு பஞ்சாப் அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் டிஜிபி சட்டோபாத்யாவின் ஓய்வூதியம் பாதியாக குறைக்கப்பட உள்ளது. பணியில் உள்ள மற்ற 2 அதிகாரிகள் பணி இறக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.