பா.ஜ.க.வின் திட்டங்கள் அதிகார வர்க்கத்துக்குரியவை: ராகுல் காந்தி!

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் இருந்து வந்தவை, பா.ஜ.க.வின் திட்டங்களோ அதிகார வர்க்கத்திடம் இருந்து வந்தவை என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கல்பேட்டாவில் அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். இந்த பா.ஜ.க. ஆட்சியில் பல திட்டங்கள் மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வலுவில்லாமல் போய் விடுகின்றன. ஏனென்றால், அந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், சிந்திப்பதிலும் பஞ்சாயத்தின் பங்களிப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம் போன்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பாருங்கள். அவற்றை நீங்கள் பா.ஜ.க.வின் திட்டங்களுடன் ஒப்பிடுங்கள். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் இருந்தும், பஞ்சாயத்துகளிடம் இருந்தும் உருவானது தெரியும். ஆனால் பா.ஜ.க.வின் திட்டங்கள் எல்லாம் அதிகாரவர்க்கத்திடம் இருந்து வருபவை ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புறுதி திட்டம், இந்திய மக்களிடம் இருந்து வந்ததாகும். மக்கள் வேலை கேட்டார்கள். அரசு அதற்கு பதில் அளித்தது. இந்த திட்டத்தை பல பங்குதாரர்களுடன் சேர்த்து மேம்படுத்த பல ஆண்டுகள் ஆனது. இந்த திட்டம், மக்களிடம் இருந்து வந்தது. இந்திய மக்களின் ஞானத்தில் இருந்து வந்ததாகும். பிரதமர் மோடி இந்த திட்டத்தை கிண்டல் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் இந்த திட்டத்தை அவர் விரிவுபடுத்தும் நிலை வந்தது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். இது அவரது மனதில் இருந்து வந்தது. அவர் நாட்டு மக்களுடன் ஆலோசிக்கவில்லை. அவர் வங்கி அமைப்பினரைக்கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க எனக்கு உரிமை உண்டு என்று மக்களவை சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். லண்டன் சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக கூறி ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் நாடாளுமன்றம் வந்தபிறகும் அவர் பதில் அளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்த ராகுல் தனக்கு பேச அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். தற்போது சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளும் ஆட்சியின் உறுப்பினர்கள் எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கு நான் விளக்கம் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தங்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். இப்போது நான் மீண்டும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கிறேன். நாடாளுமன்ற மரபுகள், அரசியலமைப்பு ரீதியான நீதி விதிகள், மக்களவை நடத்தை விதிகளின் விதி 357 ஆகியவற்றின் கீழ் இந்த அனுமதியை நான் கோருகிறேன். இந்தவிதிப்படி நீங்கள் தயவுசெய்து அனுமதிப்பது மட்டுமே பொருத்தமானது. எனவே விரைவில் மக்களவையில் பதிலளிக்க எனக்கு உரிமை வழங்குவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியிருக்கிறார்.